Wednesday 28 September 2016

தச்சன் செய்த சிறு மா வையம்

குறுந்தொகை விருந்து 
மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
[தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.]
தும்பிசேர்கீரன்
(பரத்தையிற் பிரிந்த தலைமகனது தூதாக வந்தார்க்குத்தோழி யுரைத்தது.)

சிறுவர் விளையாடுவதற்காக  தச்சன்  ஒரு தேர் செய்தான்.சிறிய குதிரை பூட்டியது போன்ற  தேர் .ஆனால் அந்தத் தேரில் ஊர்ந்து செல்லும்  இன்பம் அவர்களுக்கு இல்லை என்றால் என்ன ? அதைக் கையால் இழுத்துச் செல்லும் இன்பம் அவர்களுக்குப் போதுமே ? தாங்களே தேராகவும் அதை ஓட்டிச்செல்கிறவர்களாவும் அதில் உட்கார்ந்திருப்பவர்களாவும் எத்தனை வகை இன்பம்? இருந்தது . அது போலத்தலைவனைச் சேர்ந்து தழுவி இன்பமடைய வில்லை. எனினும்  நல்ல தேர்களும் குளங்களும் உள்ள   நட்பை எண்ணி மேன்மேலும்  அதைப் பெருகச் செய்து இன்ப மடைந்தோம். அதனால் வளைகள் அவனைப்பிரிந்த வருத்தத்தால் கழலாது இறுகின.
 (தலைவன் வந்து செய்யத்தக்கது யாதுமில்லை என்று அவளைத் தேற்றவந்த தோழியிடம் மறுக்கிறாள் என்பது குறிப்பு.)
தும்பிசேர்கீரன்.
http://sangaththamizhvaiyavan.blogspot.in/

Tuesday 5 February 2013

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்


முதலில் புறநானூறு.
சங்கத்தமிழ் என்ற இந்த வலைப்பதிவு எம்.ஏ வில் தமிழ் படித்து, உயர்நிலைப்பள்ளிகளில் 13 ஆண்டுகள் தமிழ் சொல்லிக்கொடுத்து கிடைக்கிற ஓய்வு நேரங்களில் எல்லாம் தமிழிலே மூழ்கித்திளைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம் தான்.
தமிழ் மாகடல்
தமிழ் ஒரு தனிப்பேருலகு ஓய்வின்றி சுழன்று ஒவ்வோர் ஓட்டத்திலும் புதிய வேகம் பெற்று உருளும் அதன் ஓட்டகதியில் கூடவே சென்று  அதன் அலைவீச்சில் சிந்திய நுரைத்துளி நான்.
தமிழின் எண்ணி அளந்து வரைகோடு வரைக்க முடியாத நெடுஞ்சாலையில் ஒரு பேதைப்பிள்ளையின் சிற்றடி போல் நான் எடுத்துவைக்கிற காலடிகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் புன்னகையோடு தட்டிக்கொடுத்து மாபெரும் புலவர் சென்ற பாதையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன் .

முதலில் புறநானூறு.

1. இறைவனை வணங்காது தமிழருக்கு நூலைத் தொடங்கத் தெரியாது.
கவிச்சக்கரவர்த்தி ஆனாலும் பொய்யாமொழியார் ஆனாலும் சமணர் பௌத்தர் கிறிஸ்தவர்,இஸ்லாமியர் எவராயினும் முழுமுதலை வணங்காது நூல் தொடங்குதல் இல்லை. அவ்வாறே புறநானூறும்.முதற் செய்யுள்  கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து 
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை; 5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
பாடியவர் பெருந்தேவனார்.  ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ இவர், பாரதக் கதையைத் தமிழில் முதன்முதற் பாடியவர்.

 சடா முடி தரித்தவன் அவன் . அது இறைவனது அருந்தவ முதிர்ச்சியின் சான்று , அவன் கையிலே உள்ளது நீர் வற்றவே வற்றாத கமண்டலமும்  அது அனைத்து உயிர்க்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்டும்.

அவன் தலையிலும் மார்பிலும் கொன்றைப்பூவினை அணிபவன். வாகனமாகவும்,கொடியாகவும் தூய எருதினைக் கொண்டிருப்பவன். அவன் கழுத்தை அழகு செய்கிறது அந்த நச்சுக்கறை . மறைகளை ஓதும்  அந்தணரால் அது புகழப் படுகிறது. தன உடலின் ஒரு பாகத்திலே பெண் உருவை அறியக் காட்டியும், தன்னுள் அதனை அடக்கியும் ஒளித்தும் , தானாகத் தனித்தும் விளங்குகின்றான் அவன் . அவனது நெற்றிக்கு வனப்புத் தரும் பிறை பதினெண் வகைக்கணத்தாராலும்  தேவரால் போற்றவும் படுகின்றது. (
சொற்பொருள்: 1. கண்ணி - தலையில் சூடுவது. கார்காலத்தில் மலர்வதால் கார் நறும் கொன்றை’ 2. தார்-மார்பில் அணிவது. காமர்-அழகு, 11. ஏமம்-புணை; காவல். 12. கரகம்-கமண்டலம்.

Sunday 3 February 2013

பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,



பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,

மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு                                     5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினையி
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்;
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச் 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே!


பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
[திணை என்ற சொல் நிலம் சார்ந்து எழுந்தது, ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப இயல்புகள் மாறுபடும்.அவற்றைக் குறித்துப் பாடும் புலவர் அதற்கு இன்ன திணை சார்ந்தது என்று ஒரு குறிப்பு வரைவார்.
புறநானூற்றுப் பாடல்களைத் தொகுக்கும்போது அது எந்த திணை, எந்த துறை என்ற விளக்கம் இடம்பெறும்.]
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
(“பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நால்வேத நெறி திரியினும், திரியாச்சுற்றமொடு முழுதுசேண் விளங்கி, நடுக்கின்றி நிலீயரோ” என்றதனாற் செவியறிவுறூஉ ஆயிற்று.
 ‘இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி நிலீஇயரோ’ என்றதனால், வாழ்த்தியல் ஆயிற்று.
‘பகை நிலத்து அரசர்க்குப் பயந்தவாறு கூறிப், பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி, நடுக்கின்றி நிற்பாய்’ என அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின், ‘ஓம்படை வாழ்த்து’ ஆயிற்று என்பர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ. 36 உரை)


பாரதப் பெரும்போர் நடந்த நாளிலே, உதியஞ் சேரலாதன் பாரதநாட்டை ஆண்டான். கதிரவன் தோன்றும் கீழ்க்கடலும், மறையும் மேற்கடலும், இடைப்பட்ட புதுவருவாய் குன்றாத பெருநிலப்பரப்பும் அவனுக்கே உரியன. பொறுமை, ஆராய்ச்சி விரிவு, ஆற்றல், ஆட்சித் திறன், அருள் ஆகியவற்றிலே ஐம்பெரும் பூதங்களான நிலனையும் வானையும் காற்றையும் நெருப்பையும் நீரையும் ஒத்தவன் அவன் . பால் புளித்தாலும், ஞாயிறு இருண்டாலும், மறைநெறி திரிவுற்றுப் பிறழ்ந்தாலும், கடமையினின்றும் சற்றும்பிறழாதவர் அவன் மந்திரச் சுற்றத்தினர். அவனைப்புலவர்., ‘பொருந! வான வரம்ப! பெரும!’ என விளித்து, “உயர்வால் இமயமும், புகழால் தமிழ் வளர்த்த பொதியமும் போன்று நீ நெடிது வாழ்வாயாக!” என்றார்

சொற்பொருள்: 1. திணிந்த - செறிந்த. 2. ஏந்திய - தாங்கிய. 4. தலைஇய - தலைப்பட்ட 7. போற்றார் பகைவர். சூழ்ச்சி - ஆராய்ச்சி. அகலம் - விரிவு. 9. தெறல் செருக்கு அடக்கல். அளி - அருள். 11. யாணர் வைப்பின் - புது வருவாய் பொருந்திய ஊர்களை உடைய. 13. அலங்கு உளை அசையும் பிடரி மயிரை உடைய. 14. தலைக் கொண்ட - தம்பாற் கொண்ட. பொலம்-பொன். 16. மிகு பதம் - மிக்க உணவு 19. சுற்றம் -மந்திரச் சுற்றம்; அமைச்சர், படைத் தலைவர் ஆகியோர். 20 அடுக்கத்து - மலைச்சரிவின் கண். 21. நல்வி-மான் கன்று. பிணை-பெண்மான். 24. கோடு-மலை உச்சி. துஞ்சம்-உறங்கும்.