Tuesday, 5 February 2013

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்


முதலில் புறநானூறு.
சங்கத்தமிழ் என்ற இந்த வலைப்பதிவு எம்.ஏ வில் தமிழ் படித்து, உயர்நிலைப்பள்ளிகளில் 13 ஆண்டுகள் தமிழ் சொல்லிக்கொடுத்து கிடைக்கிற ஓய்வு நேரங்களில் எல்லாம் தமிழிலே மூழ்கித்திளைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம் தான்.
தமிழ் மாகடல்
தமிழ் ஒரு தனிப்பேருலகு ஓய்வின்றி சுழன்று ஒவ்வோர் ஓட்டத்திலும் புதிய வேகம் பெற்று உருளும் அதன் ஓட்டகதியில் கூடவே சென்று  அதன் அலைவீச்சில் சிந்திய நுரைத்துளி நான்.
தமிழின் எண்ணி அளந்து வரைகோடு வரைக்க முடியாத நெடுஞ்சாலையில் ஒரு பேதைப்பிள்ளையின் சிற்றடி போல் நான் எடுத்துவைக்கிற காலடிகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் புன்னகையோடு தட்டிக்கொடுத்து மாபெரும் புலவர் சென்ற பாதையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன் .

முதலில் புறநானூறு.

1. இறைவனை வணங்காது தமிழருக்கு நூலைத் தொடங்கத் தெரியாது.
கவிச்சக்கரவர்த்தி ஆனாலும் பொய்யாமொழியார் ஆனாலும் சமணர் பௌத்தர் கிறிஸ்தவர்,இஸ்லாமியர் எவராயினும் முழுமுதலை வணங்காது நூல் தொடங்குதல் இல்லை. அவ்வாறே புறநானூறும்.முதற் செய்யுள்  கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து 
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை; 5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
பாடியவர் பெருந்தேவனார்.  ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ இவர், பாரதக் கதையைத் தமிழில் முதன்முதற் பாடியவர்.

 சடா முடி தரித்தவன் அவன் . அது இறைவனது அருந்தவ முதிர்ச்சியின் சான்று , அவன் கையிலே உள்ளது நீர் வற்றவே வற்றாத கமண்டலமும்  அது அனைத்து உயிர்க்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்டும்.

அவன் தலையிலும் மார்பிலும் கொன்றைப்பூவினை அணிபவன். வாகனமாகவும்,கொடியாகவும் தூய எருதினைக் கொண்டிருப்பவன். அவன் கழுத்தை அழகு செய்கிறது அந்த நச்சுக்கறை . மறைகளை ஓதும்  அந்தணரால் அது புகழப் படுகிறது. தன உடலின் ஒரு பாகத்திலே பெண் உருவை அறியக் காட்டியும், தன்னுள் அதனை அடக்கியும் ஒளித்தும் , தானாகத் தனித்தும் விளங்குகின்றான் அவன் . அவனது நெற்றிக்கு வனப்புத் தரும் பிறை பதினெண் வகைக்கணத்தாராலும்  தேவரால் போற்றவும் படுகின்றது. (
சொற்பொருள்: 1. கண்ணி - தலையில் சூடுவது. கார்காலத்தில் மலர்வதால் கார் நறும் கொன்றை’ 2. தார்-மார்பில் அணிவது. காமர்-அழகு, 11. ஏமம்-புணை; காவல். 12. கரகம்-கமண்டலம்.

No comments:

Post a Comment